கொழும்பில் வீதிப் போக்குவரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

தமிழ் ​செய்திகள் இன்று


கொழும்பில் வீதிப் போக்குவரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான முன்னாயத்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக, கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை மறுதினத்திலிருந்து (30) பெப்ரவரி 3ஆம் திகதி வரை,சுதந்திர சதுக்க வளாகத்தில் குறித்த முன்னோட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

குறித்த தினங்களில் காலை 6 மணியிலிருந்து பகல் 1 மணிவரையும் சுதந்திர தினமான 4ஆம் திகதி அதிகாலை 4 மணியிலிருந்து பகல் 1 மணிவரையும் கொழும்பு சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்மித்த வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுமென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

பொரளையில் இருந்து பிரவேசிக்கும் வாகனங்கள், ஹோட்டன் பிரதேசம் ஊடாக விஜேராம மாவத்தை மூலம் வோட் பிரதேசத்தை நோக்கி பயணித்து, நகர மண்டபம், யூனியன் பிரதேசம் ஊடாக பயணிக்க முடியும்.

கொழும்பில் இருந்து பொரளை நோக்கி பயணிக்கும் வாகனங்களும் குறித்த வீதியைப் பயன்படுத்த முடியும்.

எவ்வாறிருப்பினும், காலி வீதி மற்றும் பௌத்தாலோக மாவத்தையின் போக்குவரத்து வழமைபோல இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.