இரண்டு பாரிய விபத்துக்கள் – 05 பேர் உயிரிழப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


இரண்டு பாரிய விபத்துக்கள் – 05 பேர் உயிரிழப்பு

பூண்டுலோயா-தவலம்தென்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 19 வயதுடைய இரண்டு இளைஞர்களே உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

வேகமாக பயணித்த உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கொழும்பு – மினுவாங்கொடை பிரதான வீதியில் ஏக்கலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் ஒன்று வீதியை விட்டு விலகி, பஸ் தரிப்பிட சுவரொன்றுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

வேனில் பயணித்த, சீதுவ, ரத்தோலுகம மற்றும் பமுனுகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.