மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அவித்த முட்டையில் உயிரிழந்த கோழிக்குஞ்சு

தமிழ் ​செய்திகள் இன்று


மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அவித்த முட்டையில் உயிரிழந்த கோழிக்குஞ்சு

அரசு பள்ளியில் மதிய உணவு திட்டத்தின்கீழ் வழங்கிய முட்டையில் உயிரிழந்த கோழிக்குஞ்சு இருந்தது. இதனால் அப்பகுதி மக்களுடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் சார்பில் மதிய உணவாக பள்ளி மாணவர்களுக்கு உணவுடன் அவித்த முட்டை வழங்கப்படுகிறது. அதேபோல அங்கன்வாடி குழந்தைகளுக்கும் முட்டை வழங்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பால் பள்ளிகள் இயங்காத நிலையில், பள்ளிகளில் மதிய உணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு மாதத்திற்கு 10 முட்டைகள், அரிசி, பருப்பு வழங்க அரசு உத்தரவிட்டு அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முட்டை வழங்குவதற்காக நாமக்கல்லில் இருந்து ஒப்பந்ததாரர் மாதத்திற்கு ஒரு முறை முட்டையை அறந்தாங்கியில் கொண்டு வந்து ஒப்படைக்கிறார்.

பின்னர் அந்த முட்டை மதிய உணவு திட்ட சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அறந்தாங்கியை அடுத்த ஆயிங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டையை அவித்து முட்டையின் ஓட்டை உடைத்தபோது அந்த முட்டையின் உள்ளே இறந்த நிலையில் கோழிக் குஞ்சு இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், இது குறித்து சத்துணவு மைய பணியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்தனர். மேலும் பல முட்டைகளை அவித்து விட்டு ஓட்டை உடைத்தபோது கடுமையாக துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், கொரோனா தொற்றால் முட்டைகள் தேக்கமடைந்ததால், பள்ளிகளுக்கு தேங்கிய காலாவதியான முட்டையை ஒப்பந்தக்காரர்கள் வழங்கியுள்ளனர்.

முட்டையில் குஞ்சு உள்ளது என்றால், நாமக்கல் பண்ணைகளில் குஞ்சு பொறிப்பதற்காக வைக்கப்பட்டு, குஞ்சு வெளிவராத வீணாகி போன முட்டைகளை அறந்தாங்கி பகுதி பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளனரா? எனத் தெரிய வில்லை. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அறந்தாங்கி பகுதியில் வினி யோகம் செய்யப்பட்ட முட்டைகள் அனைத்தையும் சோதனையிட்டு அவை நல்ல முட்டைதானா? என்பதை கண்டறியவேண்டும்.

மேலும் காலாவதியான முட்டையை வினியோகம் செய்த ஒப்பந்தக்காரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதோடு, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.