தாயும் மகனும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வௌியான முக்கிய தகவல்கள்

தமிழ் ​செய்திகள் இன்று


தாயும் மகனும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வௌியான முக்கிய தகவல்கள்

அம்பாறை மாவட்டத்தின் தமணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரலந்தா கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் தாய் மற்றும் மகனின் சடலங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இராணுவ அதிகாரியான கணவனை கடந்த கால யுத்தத்தில் இழந்த குறித்த பெண் தனது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மற்றொரு நபர் அந்த பெண்ணுடன் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சம்பவம் நடந்த நாளில் அந்த நபர் வீட்டிற்கு வந்து மது அருந்தியதாக பொலிஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபர் இறந்த பெண்ணின் தாயை தொலைபேசி ஊடாக அழைத்து திட்டியுள்ளதை தொடர்ந்து அந்த பெண் தனது தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை அந்த நபர் துன்புறுத்துவதாகவும், இதனால் மகனை நாளை பாடசாலைக்கு அழைத்து செல்ல முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த தாய் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளை தனது மகளுக்கு மேற்கொண்ட போதும் அவர் பதிலளிக்கவில்லை என தெரியவருகிறது.

காலையில் பக்கத்து வீட்டில் இருந்த பெண் இறந்த பெண்ணின் மகன் பாடசாலைக்கு செல்லாத காரணத்தினால் விசாரிக்கச் சென்றுள்ளார். இதன் போது வீட்டின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் வீட்டின் பின்னால் இருந்து வீட்டிற்குள் நுழைந்த போது தாயும், மகனும் இரத்த வெள்ளத்தில் சடலங்களாக கிடந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அயலவர்கள் தமணை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் அங்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் குறித்த கொலை குறித்து குற்றவியல் புலனாய்வுத்துறை மற்றும் தமணை பொலிஸ் நிலைய குற்றவியல் புலனாய்வு பிரிவு இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் சந்தேகநபரை தேட பொலிஸ் நாய்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதுடன் கைரேகைகள் தடயங்கள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

மேலும் சந்தேகநபர் திஸ்ஸமஹராமவில் வசிப்பவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.