இழுபறி நிலையில் ஜனாஸா அடக்க விடயம்; சுகாதாரப் பிரிவு கூறுவது என்ன?

கொவிட்-19 காரணமாக மரணிப்போரின் சரீரங்களை அடக்கம் செய்வது தொடர்பிலான ஆலோசனைகள் சுகாதார அமைச்சின் மூலம் உரிய வழிமுறைகள் கிடைக்கப்பெற்ற பின்னர், அதற்கமைய செயற்பட முடியும் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் பிரதமர் விடுத்த கருத்து தொடர்பில் மாத்திரமே தற்போது தகவல் கிடைத்துள்ளன.

அவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் போது சுகாதார அமைச்சின் ஊடாக உரிய முறைமைகளுடனான வழிகாட்டல்கள் வழங்கப்படும்.

இதற்கமையவே மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட் 19 நோயால் மரணிப்பவர்கிளன் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதா? இல்லையா? என்பதை, சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவே தீர்மானிக்கும் என்று, விடயத்துக்குப் பொறுப்பானவரான, ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

கொவிட் நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் அறிவித்திருந்தார்.

விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் இது தொடர்பான விளக்கத்தை வழங்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளேயிடம் நேற்று கோரினார்.

அதற்கு பதில் வழங்கிய அவர், இந்த விடயத்தில் தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவிடமே இருப்பதாகவும், பிரதமர் தெரிவித்த யோசனை, குறித்த நிபுணர்கள் குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

You may also like...