இம்ரான்கானுக்கு இறுதி நேரத்தில் அனுமதி மறுப்பு

இம்ரான்கானுக்கு வழங்கப்பட இருந்த பாராளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு, நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான வாய்ப்பை வழங்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது

இராஜதந்திர மட்டத்தில் எழக்கூடிய நெருக்கடிகளைக் காரணங்காட்டி அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இரண்டுநாட்கள் இலங்கையில் தங்கவுள்ள அவர், அரச தலைவர், பிரதமர் உட்பட உயர்மட்டப் பிரமுகர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டு பிரதமர் அல்லது உயர்மட்ட அரச பிரமுகர்க்ள 2016ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற முதல் சந்தர்ப்பம் இதுவென்பதால் இம்ரான் கானின் விஜயத்திற்கு பெருமுக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

இம்ரான் கான், 24ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் எனவும், அதற்கு வாய்ப்பளிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

பாகிஸ்தானால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கமையவே அதற்கான அனுமதி வழங்கப்படவிருந்தது.

இருந்த போதிலும் இராஜதந்திர மட்டத்தில் எழக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படும் நெருக்கடி காரணமாக இந்த முடிவினை இலங்கை அரசாங்கம் மாற்றிக் கொண்டுள்ளதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

You may also like...