நீதியமைச்சர் அலிசப்ரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்

நீதியமைச்சர் அலிசப்ரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்தார்.

தனி நபர் மற்றும் பிரதேச அடிப்படையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை புதிய அரசியலமைப்பின் ஊடாக முழுமையாக இரத்துச் செய்ய வேண்டு என்ற கோரிக்கையை அரசியலமைப்பு நிபுணர் குழுவிடம் முன்வைக்கவுள்ளோம்.

பௌத்தமத சட்டங்கள் குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில் ஆற்றிய உரை குறித்து உரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என  அத்துரலிய ரதன தேரர் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் அபேஜன பலவேகய கட்சியின் யோசனை குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசவழமை சட்டம் , மேல்நாட்டு சட்டம் மற்றும் பௌத்த விகாரைகள் தொடர்பான சட்டம் மனித உரிமை மீறல்களுக்கு வழி வகுக்கவில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள முஸ்லிம் விவாக சட்டம், காதி நீதிமன்றம் அடிப்படை சட்டத்துக்கு அப்பாற்பட்டதும் மனித உரிமை மீறல்களையும் ஊக்குவித்துள்ளது.

முஸ்லிம் விவாக சட்டத்தையும், காதி நீதிமன்றத்தையும் முழுமையாக இல்லாதொழிக்க ஆரம்ப காலத்தில் இருந்து பல வழிமுறைகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

தனிநபர் மற்றும் பிரதேச அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் அனைத்தும் புதிய அரசியலமைப்பின் ஊடாக முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிபுணர் குழுவிடம் முன்வைக்கவுள்ளோம்.

ஒரு நாடு-ஒரு சட்டம் என்பதை அனைத்து இன மக்களும் கண்டிப்பாக பின்பற்றும் பொறிமுறை புதிய அரசியலமைப்பில் அறிமுகப்படுத்த வேண்டும்.

பௌத்த விஹாரைகள் சட்டம் தொடர்பில் கடந்த 12 ஆம் திகதி நீதியமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில் ஆற்றிய உரை முற்றிலும் தவறானது.பௌத்த சட்டங்களை , தனிநபர் சட்டங்களுடன் ஒப்பிட முடியாது.

இவரது உரை குறித்து நீதியமைச்சர் அலிசப்ரிக்கு எதிராக உரிய விசாரணை நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு பௌத்த மத தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பௌத்த தலைவர்களின் கோரிக்கை குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.

தேசிய வளங்களையும், தேசிய உற்பத்திகளையும் பாதுகாக்கும் பலமான கொள்கை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.

இறக்குமதி பொருளாதாரத்தை மாத்திரம் நம்பியிருந்தால் ஒரு சில நாடுகளின் குறுகிய நோக்கத்திற்கும் அடிப்பணிய வேணடும்.

இவ்வாறான தன்மை மாற்றம் பெற வேண்டுமாயின் தேசிய உற்பத்திகள் முடிந்தளவுக்கு மேம்படுத்தப்பட வேண்டும் என்றார்.

You may also like...