ஜனாதிபதி ஆணைக்குழு வௌியிடாத உண்மைகள் – பலவந்தமாக பாதுகாப்பு அமைச்சுக்கு சென்ற ரணில்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த உண்மை கருத்துகளை வெளியிடாத ஜனாதிபதி ஆணைக்குழு, ‘ஒரு நாடு; ஒரு சட்டம்’ எனப் பரிந்துரைகளைக் கொண்டு, அரசியல் கட்சி கொள்கை அளவில், வெறும் ஆவணத்தை மாத்திரமே முன்வைத்துள்ளதாக, ஐ.தே.க தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘முதலாவது தாக்குதல் நடத்தப்பட்ட உடனேயே, பிரதமரான நான், பலவந்தமாகப் பாதுகாப்பு அமைச்சுக்கு சென்று, பாதுகாப்புப் பிரதானியை அழைத்து, அடுத்தடுத்த தாக்குதல்கள் நடைபெறாத வகையில் தடுத்தேன்’ என்றார்.’

கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்ற அன்று, பாதுகாப்புப் பிரிவுகளைக் கொண்டு, அதன் பின்னர் தாக்குதல் இடம்பெறாத வகையில், தடுக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்கள் எவையும் ஆணைக்குழுவின் அறிக்கையில் இல்லை என்றார்.

‘ஒரு நாடு; ஒரு சட்டம்’ என்பதை அமுல்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை இரத்துச் செய்ய, ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைக்கிறதா எனவும் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியதுடன், நிலங்களை இனங்களுக்குப் பிரிப்பதன் மூலம், நாடு எதிர்கொள்ளும் விளைவு என்னவாகுமென வினவினார்.’

மேலும், சிங்கள-தமிழ் புத்தாண்டுக்கு முன்னர், ஏப்ரல் 09 ஆம் திகதி, பாதுகாப்பு சபை கூடியபோது, தாக்குதல் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கிடைக்கப்பெற்ற எந்தவொரு தகவல் குறித்தும் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றார்.

இராணுவ பிரதானி, குற்ற விசாரணை திணைக்கள உயரதிகாரிகள் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சகலரும் அக்கூட்டத்தில் வெளியிடாத விடயங்களை, அதன் பின்னர் கலந்துரையாடினரா என்பதைக் கூற முடியாது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில், புதிதாக ஒன்றும் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, மேலைத்தேய சட்டத்தை நீக்க, ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைக்கிறது எனவும் தெரிவித்தார்.

பாதுகாப்புச் சபை கூடியபோது, தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்தால், முஸ்லிம் எம்.பிக்களை அழைத்து ஏதேனும் தாக்குதல் சம்பவம் நடத்தப்படுமாயின், அதற்கான முழு பொறுப்பையும் அவர்கள் ஏற்கவேண்டும் எனக் கூறியிருக்க முடியும் என்றார்.

You may also like...