இன்று பரீட்சை எழுத இருந்த மகளின் அனுமதி அட்டையை தீவைத்து எரித்த தந்தை

இன்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவிருந்த தனது மகளின் தேசிய அடையாள அட்டை, பரீட்சை அனுமதி அட்டை மற்றும் ஆடை உட்பட வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் தந்தையொருவர் தீவைத்து எரித்த சம்பவம் ஒன்று ஹபராதுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக குறித்த நபர் இவ்வாறு வீட்டிலுள்ள பொருட்களுக்கு தீவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஹபராதுவ காவல்துறையினரால் இன்று(01) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காலி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 15 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இச்சம்பவத்தின் பின்னர், பரீட்சார்த்தியான மாணவியினது அடையாள அட்டை மற்றும் அனுமதி அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாக காவல்துறையினரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட கடிதம் ஒன்று பரீட்சை மண்டப பொறுப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பரீட்சை எழுதுவதற்கு குறித்த மாணவிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You may also like...