பசில் ராஜபக்ஷ – மங்கள சமரவீர இடையில் விஷேட சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் அடுத்த சில தினங்களில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசேட அரசியல் பேச்சுவார்த்தை ஒன்றுக்காக இந்த சந்திப்பு நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த மங்கள சமரவீர, இறுதி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.

இதனையடுத்து அவர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருங்கி செயற்பட்டு வந்தார்.

2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரும் பெரும் பங்காற்றிய மங்கள, இரண்டு வருடங்களில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அமைச்சு பதவியில் இருந்து விலகி, எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கொழும்பில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பசில் ராஜபக்சவை சந்தித்த, மங்கள சமரவீர அவருடன் நீண்ட நேரம் நட்புறவுடன் கலந்துரையாடியிருந்தார்.

இந்த நிலையில், பசிலுக்கும் மங்களவிற்கும் இடையில் தற்போது நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை எந்த நோக்கத்தை கொண்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை.

எனினும் இந்த பேச்சுவார்த்தையானது ஏதேனும் ஐக்கிய கூட்டணிக்கான ஆரம்பமாக அமையலாம் என நம்ப தகுந்த தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

You may also like...