தேசிய பௌத்த அமைப்புக்களை தடை செய்ய முன்னெடுக்கும் அரசியல் சூழ்ச்சியா?

தமிழ் ​செய்திகள் இன்று


தேசிய பௌத்த அமைப்புக்களை தடை செய்ய முன்னெடுக்கும் அரசியல் சூழ்ச்சியா?

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் என்ற அரக்கனினால் நாங்கள் தற்கொலை குண்டுதாரியாக மாற நேர்ந்துள்ளது என பயங்கரவாதி ஸஹ்ரான் தாக்குதலை நடத்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட விடயத்தை கொண்டு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பயங்கரவாத தாக்குதலுக்கு ஞானசார தேரர் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது .

இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு செயற்பட்டதே தவிர பாரம்பரிய முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக செயற்படவில்லை.

விசாரணை அறிக்கை ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை. மாறாக தேவையற்ற விடயங்களை மாத்திரம் உள்ளடக்கியுள்ளது.

கிரிக்கெட், கலை, நீதி ஆகிய துறைகளில் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையை உடையவர்கள் செல்வாக்குக் கொண்டுள்ளார்கள்.

இது சாதாரண விடயமல்ல. இவ்விடயம் குறித்து அரச மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் வௌியிட்டுள்ள அறிக்கை

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கம் வெளியாகியுள்ளது.

குண்டுத் தாக்குதலின் பின்னணியின் உண்மைக் காரணியையும் தாக்குதல்தாரிகளை இயக்கியவர்களையும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பகிரங்கப்படுத்தும் என்று ஆணைக்குழு மீது வைத்த நம்பிக்கை முழுமையாக இல்லாமல் போயுள்ளது.

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தற்கொலை குண்டுதாரி ஸஹ்ரானின் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம் பெறுவதற்கு முன்னர் பகிரங்கப்படுத்தினார் என்பது இரகசியமான விடயமல்ல.

2014 ஆம் ஆண்டு தொடக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதம் பலம் பெற்றுள்ளதையும், அவர்களின் உண்மையான இலக்கையும் ஞானசார தேரர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார்.

இவ்வாறான நிலையில் ஆணைக்குழுவின் அறிக்கையில் ஞானசார தேரருக்கு எதிராக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், பொதுபல சேனா அமைப்பை தடை செய்யவும் குறிப்பிட்டுள்ளமை தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்ய முன்னெடுக்கும் அரசியல் சூழ்ச்சி என்றே குறிப்பிட வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம் பெறுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் தாங்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றமடைவதற்கு கலகொடத்தே ஞானசார தேரர் என்ற அரக்கன் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கூற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஞானசார தேரரும் பொறுப்பு கூற வேண்டும் என்று ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

பிற நாட்டு பிரஜைகள் நாட்டுக்கு வருகை தருவதும் அவர்களின் கலாசாரத்தை பின்பற்றுவதும் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பிறிதொரு காரணம் என பயங்கரவாதி ஸஹ்ரான் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து ஆணைக்குழு உரிய கவனத்தை செலுத்தாமலிருந்துள்ளமை கவலைக்குரியது.

இஸ்லாமிய அடிப்படைவாதமொன்று கிடையாது. குண்டுத் தாக்குதல் கொள்கையற்ற தன்மையில் முன்னெடுக்கப்பட்டது என்பதையே அறிக்கை புலப்படுத்துகிறது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத செயற்பாடுகளுடன் பொதுபல சேனா அமைப்பின் பங்கிளிப்பு எத்தன்மையில் காணப்பட்டது. என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஞானசார தேரர் கடந்த காலங்களில் அளுத்கமை, மஹரகம ஆகிய பகுதிகளில் பொதுபலசேனா அமைப்பின் கூட்டங்களில் ஆற்றிய உரையை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முழுமையாக ஆராய்ந்துள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தாரே தவிர பாரம்பரிய முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒருபோதும் செயற்படவில்லை.

பொதுபல சேனா அமைப்பு கட்டாயம் தடை செய்யப்பட வேண்டும்

பொதுபல சேனா அமைப்பு கட்டாயம் தடை செய்யப்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எச்சட்டத்தின் பிரகாரம் தடை செய்யப்பட வேண்டும் என எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

பொதுக் காரணிகளையும், சாட்சியங்களையும் விடுத்து தனிப்பட்ட பகைமையைத் தீர்த்துக் கொள்ளும் நோக்கில் பொதுபல சேனா அமைப்பை தடை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அடிப்படைவாதத்தை தோற்றுவிக்க அகில இலங்கை ஜமய்யதுல் உலமா அமைப்பின் தலைவர் ரிஸ்வி முப்தி முன்னின்று செயற்பட்டார்.

ஏனைய தௌஹீத் அமைப்புக்களை காட்டிலும் வஹாபி அடிப்படைவாதத்தை பலப்படுத்த ரிஸ்வி முப்தியின் அமைப்பு அக்கறையுடன் செயற்ப்பட்டது. இந்த அமைப்பை கண்காணிக்குமாறு கடினமான கொள்கைளை ஆணைக்குழு பின்பற்றவில்லை.

பொதுபல சேனா அமைப்பை தடை செய்ய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஊடாக சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

தேசிய அமைப்புக்களை தடை செய்து 87,89 காலப் பகுதியில் நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு இளம்தலைமுறையினரை கொண்டு செல்லுமளவுக்குகு அறிக்கை காணப்படுகிறது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் உண்மை காரணியையும், தற்கொலை குண்டுதாரிகளை இயக்கியவர்களையும் கண்டு பிடிக்கவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

இவ்வாறான நிலையில் எவ்வாறு எதிர்காலத்தில் அடிப்படைவாத தாக்குதல்கள் இடம் பெறாது என்று உறுதியாக குறிப்பிட முடியும்.

பௌத்த தர்மம், பௌத்த சாசனம் ஆகியவற்றை பாதுகாப்பது குறித்து அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியிலான ஆட்சியாளர்கள் பௌத்த கொள்கைக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கியுள்ளார்கள்.

பௌத்த கொள்கைக்கு அமைய தற்போதைய அரசாங்கம் என்றும் செயற்பட வேண்டும். மத சார்பாற்ற ஒரு கொள்கையை உருவாக்குவது அவசியம் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறாய யோசனை பௌத்த சாசனத்தை பலவீனப்படுத்தும்.

அனைத்து துறைகளிலும் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கை

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையை உடையவர்கள் அனைத்து துறைகளிலும் உள்ளார்கள்.கிரிக்கெட், கலை, நீதிக் கட்டமைப்பு ஆகிய துறைகளில் இவர்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

இவர்களின் செயற்பாடு குறித்து அரச மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். ஆணைக்குழுவின் சூழ்ச்சியினால் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு சிதைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் நோக்கத்தையும் பொது மக்களின் வரிப் பணத்தையும் இந்த ஆணைக்குழு வீணடித்துள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதி வழங்க ஜனாதிபதி மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.