கொழும்பு டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படம்

தமிழ் ​செய்திகள் இன்று


கொழும்பு டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படம்

கொழும்பு டாம் வீதியில், ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குருவிட்டை பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணுடையது என சந்தேகிக்கப்படும் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், பெண்ணின் சடலத்தை கொழும்பு டாம் வீதியில் வைத்து தலைமறைவான உப பொலிஸ் பரிசோதகர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சந்தேகநபர் என்று தெரிய வந்துள்ளது.

குருவிட்ட தெப்பாகம பகுதி யுவதியுடன் காதல் தொடர்பு இவருக்கு இருந்ததாகவும் , நேற்றுமுன்தினம் ஹங்வெல்ல பகுதி ஹோட்டலுக்கு இந்த யுவதியை அழைத்த இவர் அங்கு யுவதியை படுகொலை செய்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யுவதியின் தலையை வீசிவிட்டு உடலை மட்டும் கொழும்புக்கு எடுத்துவந்த இந்த நபர் , தங்கியிருந்த ஹோட்டலின் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த விடயத்தை வெளியில் கூறினால் கொலை செய்வதாக எச்சரித்துள்ளார்.

சந்தேக நபரை கைதுசெய்ய சென்ற போது, நேற்று தனது வீட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளதுடன், இவரை தேடி விசேட பொலிஸ் குழுக்கள் விரைந்துள்ளன.

எவ்வாறாயினும் தலைமறைவான நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், அதன் பின்னர் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் பெரிய தவறொன்றை செய்துவிட்டதாகவும் பொலிஸ் தன்னை நெருங்கினால் தற்கொலை செய்துகொள்வதாகவும் கூறி இவர் எழுதிய கடிதமொன்றும் அவரது வீட்டில் இருந்து சிக்கியுள்ளது.

பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.