குளத்தைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு

தமிழ் ​செய்திகள் இன்று


குளத்தைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு

நகைச்சுவை நடிகரான வடிவேல், பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, ‘கிணற்றைக் காணவில்லை’ என முறைப்பாடு செய்வார். அந்த நகைச்சுவை காட்சியைப் பார்த்தவர்களின் மனக்கண்ணின் முன் இன்னமும் வந்துசெல்லும்.

அதேபோல், ‘குளத்தைக் காணவில்லை’ எனப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவமொன்று கிழக்கில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு, தாமரைக்குள கண்டத்திலுள்ள ‘காரப்புக்கேணி’ குளக்கட்டை நபரொருவர் பாரிய இயந்திரத்தைக் கொண்டு உடைத்துள்ளார்.

அதன்பின்னர், அக்குளத்தை மணல்கொண்டு நிரப்பி மூடியுள்ளார். இது தொடர்பில் தம்பிலுவில் கமநல சேவை நிலையத்தில் விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.

அதையடுத்தே, குளக்கட்டை உடைத்த நபருக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், பிரதேச செயலக அதிகாரிகள், கமநல சேவை நிலைய அதிகாரிகள் ஆகியோர் குறித்த குளம் இருந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதேவேளை, குறிப்பிட்ட இடத்தில் எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடாதென பிரதேச செயலகத்தால் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மேற்படி நபர், குளக்கட்டை இடித்து தரைமட்டமாக்கிஇ குளத்தையே காணாமல் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.