உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை காப்பாற்ற பிரபலமான சட்டத்தரணிகள்
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட பிரதான குற்றவாளிகள் எவரும் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத வகையில் அவர்களுக்கு எதிரான சாட்சியங்களை பலப்படுத்தி வருகின்றோம்.
எந்த வகையிலேனும் அவர்களை விடுதலை செய்வதை தடுக்கும் சகல நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
குற்றவாளிகளை காப்பாற்ற பிரபல்யமான சட்டத்தரணிகள் முன்வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை தற்போது சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எட்டு இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது. இந்த இடங்கள் குறித்த பரிசோதனை அறிக்கையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்டதாக கருதப்படும் 32 பேரும், ஏதேனும் ஒரு விதத்தில் இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களாக 241 பேரும் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேபோல் தொடர்ச்சியாக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குற்றவாளிகளை எக்காரணம் கொண்டும் விடுதலை செய்ய மாட்டோம்.
தற்போது தடுப்புக்காவலில் உள்ள பிரதான குற்றவாளிகள் 32 பேருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபரை வலியுறுத்தியுள்ளோம்.
எனினும் அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை மேலும் திரட்டி குற்றத்தை உறுதியாக நிரூபிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ஏனென்றால் இந்த குற்றவாளிகளை காப்பாற்ற பிரபல்யமான சட்டத்தரணிகள் முன்வருகின்றனர்.
எனவே இவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் ஏதேனும் சிறிய பலவீனத்தன்மை காணப்பட்டாலும் அதனை பயன்படுத்தி குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்.
எக்காரணம் கொண்டும் இவர்கள் தப்பிக்கவே கூடாது, இவர்களை விடுதலை செய்து மீண்டும் பிரச்சினைகளை உருவாக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
எனவே இவர்களுக்கு எதிரான சாட்சியங்களை மேலும் வலுப்படுத்தி சகலரையும் தண்டிக்கவே நாம் நடவடிக்கை எடுக்கின்றோம்.
பேராயரின் கோபம் நியாயமானது. இதனாலேயே இப்போதும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது, சாதாரண குற்றங்களை போன்றதொரு சம்பவம் அல்ல இது.
இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட பலர் இன்னமும் வெளியில் உள்ளனர். இவ்வாறான தாக்குதல் இனிமேலும் இடம்பெறக்கூடாது என்பதற்காக நாம் சகல விதத்திலும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.