நாமல் ராஜபக்ஷவை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் – தாமதமான விமானம்

விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால், விமானமொன்று 45 நிமிடங்கள் தாமதமாகிப் புறப்பட்டுச் சென்ற சம்பவமொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (07) இடம்பெற்றுள்ளது.

வெளிநாடொன்றுக்குச் செல்வதற்காக, நேற்று (07) காலை வேளையில், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நாமல் ராஜபக்ஷ வருகைதந்தார்.

எனினும், அவர் தொடர்ந்து பயணிப்பதற்கு அங்கிருந்த குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

அவருக்கு எதிரான வழக்கொன்றில், வெளிநாட்டுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அத்தடை நீக்கப்பட்டமைக்கான தகவல் அதிகாரிகளுக்கு முறையாகச் சென்றிருக்கவில்லை.

அமைச்சர், வெளிநாட்டுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், இரண்டு தடையுத்தரவுகள் கோட்டை நீதவான் நீதிமன்றால் விதிக்கப்பட்டிருந்தன.

எனினும், அவ்விரு தடையுத்தரவுகளும் மார்ச் மாதம் 4ஆம் திகதி நீக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த விடயம் குறித்து, விமான நிலைய குடிவரவு-குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க நீதிமன்ற பதிவாளர் நடவடிக்கை எடுத்திருந்த போதும் நேற்று (07) வரை அத்தகவல் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று (7) காலை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் டீ. வீ.சானக உள்ளிட்ட எழுவர் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே.651 என்ற விமானத்தில் டுபாய்க்குச் செல்ல வந்துள்ளனர்.

எனினும், விமானப் பயணத் தடையுத்தரவு நீக்கப்பட்ட விடயம் தமக்கு கிடைக்கவில்லையெனத் தெரிவித்து அதிகாரிகள் நாமலின் பயணத்தைத் தடுத்தனர்.

பயணத் தடை நீக்கப்பட்ட விடயத்தை, விமான நிலைய அதிகாரிகளுக்கு நீதிமன்றப் பதிவாளர் அறிவித்ததையடுத்து, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் காலை 10.45க்கு பயணத்தைத் தொடர்ந்தனர்.

You may also like...