தாக்குதலுக்கு முன் மலேசியா சென்ற சஹ்ரான்? மலேசியாவில் இருந்த புலனாய்வு அதிகாரி யார்?

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹாசிம் மலேசியாவிற்குச் சென்றதாகவும் அங்கு இலங்கை புலனாய்வு அதிகாரி ஒருவர் இருந்ததாகவும் கூறப்படும் தகவல் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சஹ்ரானின் மலேசிய விமான பயணம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம் என பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் கூறினார்.

“சாரா என்ற பெண், பொலிஸ் அதிகாரி ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மன்னார் சென்றதாக நாம் ஏற்கனவே கூறினோம்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரி நாகூர் தம்பி என்பவரே இவ்வாறு சாராவை அழைத்துச் சென்றார். அவர் இன்று சிறையில் உள்ளார்.

சாரா இந்தியா செல்ல அவர் உதவியுள்ளதாகவே தெரிகிறது. ஆனால் சாரா குறித்து தெரியாது என அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கும் போது உதய கம்மன்பில கூறுகிறார்.

சாராவை மறைக்க முயற்சிப்பதன் மூலம் பிரதான சூத்திரதாரியையும் மறைக்க முயற்சிக்கின்றனர்.

சஹ்ரான் ஹாசிம் தாக்குதலுக்கு முன் மலேசியா சென்றாரா? அந்த பயணத்தின் விசாரணை தகவல்கள் உள்ளதா? மலேசியாவில் அப்போது பணியில் இருந்த இலங்கை புலனாய்வு அதிகாரி யார்?

நமது புலனாய்வு அதிகாரிகள் அப்போது இந்தியா சென்றனரா? நாட்டு மக்களுக்கு இதுகுறித்து சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

You may also like...