உலக கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கு 25 ஆண்டுகளின் பின் கிடைக்கப் போகும் பரிசு

தமிழ் ​செய்திகள் இன்று


உலக கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கு 25 ஆண்டுகளின் பின் கிடைக்கப் போகும் பரிசு

இலங்கை கிரிக்கட் அணி, உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி, பாகிஸ்தானின் லாஹுரில் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி இடம்பெற்றது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இந்தப் போட்டியில் மோதின.

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 242 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை கிரிக்கட் அணி, 46.2 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

இதனடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 1975 முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற அனைத்து அணிகளுக்கும் பதக்கங்களை வழங்க முடிவு செய்தது.

அதன்படி, இலங்கை அணியைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த பதக்கங்களை வழங்குவதை ஒரு விசேட நிகழ்வாக நடத்த இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், அவ்வப்போது எழுந்த தவிர்க்க முடியாத காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது.

இன்று (17) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.