இந்திய மீனவர்கள் 54 பேர் கைது; இந்திய தூதரகம் வௌியிட்ட அவசர அறிக்கை

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 54 இந்திய மீனவர்களின் விவகாரம் குறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த மீனவர்களின் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசாங்கம் கையாள வேண்டும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 54 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களது படகுகளையும் கைப்பற்றிய சம்பவம் தமிழக மீனவர் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தில், இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்காமல் புறக்கணித்த சம்பவம் நடந்த மறுநாள் இந்தக் கைதுகள் நடந்துள்ளன.

இந்நிலையில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு உடனடி தூதரக அணுகல் மற்றும் அவசரகால பொருட்களை வழங்குவது முக்கியமானது என்று கூறப்பட்டுள்ளது.

இதற்காக நாம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கட்நத 2020ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி இந்திய மீனவர்களின் கைது உட்பட இருநாட்டுப் பிரச்சினைகள் பற்றி தொழில்நுட்ப உதவியுடன் இருநாட்டுத் தலைவர்களும் பேச்சு நடத்தியிருந்ததை தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த வகையில் இலங்கை அரசாங்கத்துடன் மேற்படி விவகாரம் குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவே தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like...