இலங்கை பாராளுமன்றத்தில் கடுமையான வாதப்பிரதிவாதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில், இலங்கை பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, ஜெனிவா தீர்மானம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து சபையில் உரையாற்றினார்.

இதையடுத்து, கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஜெனிவா தீர்மானமானது பதினேழரைப் பக்கங்களைக் கொண்டது என்றும், அதில் இரண்டு பக்கங்களில் மாத்திரமே யுத்தம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஏனைய 15 பக்கங்களிலும், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர், நாட்டில் இல்லாமல்போன ஜனநாயகம், ஊடக சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகள் என்பன தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்டு கருத்து தெரிவித்த அமைச்சர் தினேஸ் குணவர்தன, இதற்காகவா மனித உரிமைகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

நமது நாட்டுக்குள் ஆட்சி முறைமை குறித்து கருத்து தெரிவிப்பதற்காகவா? மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது?

இது லக்ஷ்மன் கிரியெல்லவின் பொறுப்பற்ற கருத்தாகும் என அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறினார்.

இதற்கிடையில், குறுக்கிட்ட சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்ன, இது குறித்து தனியான விவாதம் ஒன்றைக் கோருங்கள் எனக் குறிப்பிட்டார்.

You may also like...