ரமழான் மாதத்தில் பொதுமக்கள் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் வௌியீடு

அமீரகத்தில் ரமழான் மாதம் அடுத்த மாதம்(ஏப்ரல்) தொடங்குகிறதால் அமீரகம் முழுவதும்,ரமழான் மாதத்தில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமழான் மாதம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரமழான் மாதம் கொண்டாடப்படவில்லை. இந்தநிலையில், தற்போதும் கொரோனா பரவல் அவ்வப்போது அதிகரித்து வருவதால், இந்த மாதத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்று பரவாதபடி, துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுமக்கள் ரமழான் மாதத்தில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அமீரகத்தில் பொதுவாக பள்ளிவாசல்களில் இரவு நேரத்தில் தராவீஹ் எனப்படும் சிறப்பு தொழுகை நடைபெறும். இந்த தொழுகையானது 30 நிமிட நேரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும்.

எனினும் பெண்கள் தொழுகைக்கூடம் மூடப்பட்டிருக்கும்.

* எந்தவிதமான சந்திப்பு நிகழ்ச்சிகளும் இருக்க கூடாது. குறிப்பாக நோன்பு திறக்கும் நேரத்தில் கூட்டம் கூட அனுமதி கிடையாது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தங்களது உணவுப் பொருட்களை பங்கிட்டு கொள்ள வேண்டும்.

* நோன்பு திறக்கும் கூடாரங்களுக்கு அனுமதி கிடையாது. நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் பள்ளிவாசலுக்கு கொண்டு வரக் கூடாது. உணவகங்கள் கடையின் உட்புறமோ அல்லது வெளிப்புறமோ வினியோகம் செய்ய அனுமதி கிடையாது.

துபாய் நகரில் மேற்கொண்ட பொதுவான விதிமுறைகளுடன் நன்கொடை வசூலிப்பதற்காக அமைக்கப்படும் கூடாரங்களுக்கு அனுமதி கிடையாது.

அதிகமான கூட்டம் இருக்கும் நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. இரவு நேர சிறப்புத் தொழுகையின் போது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

சார்ஜா பகுதியிலும் நோன்பு திறக்கும் கூடாரங்கள் அமைக்க அனுமதி கிடையாது. நோன்பு திறக்கும் உணவுப் பொருட்களை வினியோகம் செய்வது தொடர்பாக சிறப்பு விளம்பரங்கள் செய்ய கூடாது.

அனுமதிக்கப்பட்ட தன்னார்வ அமைப்புகள் மூலமாக மட்டுமே உணவுப் பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும்.

அஜ்மான் பகுதியில் வழங்கப்பட்ட நோன்பு திறக்கும் கூடாரங்களுக்கான அனுமதி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே அனுமதிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் மட்டுமே அசர் தொழுகைக்குப் பின்னர் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும்.

மக்ரிப் தொழுகைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக இந்த பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

ராசல் கைமா, உம் அல் குவைன் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த அவசர சேவை மற்றும் பேரிடர் குழுக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளது.

You may also like...