சாரதி தாக்கப்பட்ட சம்பவம்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழ் ​செய்திகள் இன்று


சாரதி தாக்கப்பட்ட சம்பவம்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மஹரகம – பன்னிப்பிட்டி பிரதேசத்தில் பாரவூர்தி சாரதியை தாக்கிய காவல்துறை அதிகாரி எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்தியதன் பின்னர் தாக்கப்பட்ட சாரதியும், தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரியும் இன்று நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பபட்டிருந்தது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில, அரசாங்கம் இந்த விடயத்தில் சொல்லில் அல்லாது செயலில் காண்பித்துள்ளது.

குறித்த காவல்துறை அதிகாரி பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.

இவ்வாறான சம்பவங்களை அரசாங்கம் அனுமதிக்காது என்ற நிலைப்பாட்டிலேயே காவல்துறை மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

சாரதி தாக்கப்பட்ட சம்பவம்; முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் பேஸ்புக் பதிவு

மஹரகமை நகர வீதியில் லொறியை ஓட்டி வந்த ஹப்புதளையை சேர்ந்த கலைமகன் பிரவீன், அவ்வீதியில் பணியில் இருந்த மஹரகமை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் ஆய்வாளர் (IP) மைத்திரிபாலவின் மீது மோதி உள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த அங்கே பணியில் இருந்த இன்னொரு போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் இஸ்மாயில் ரிபைடீன், லொறி சாரதி கலைமகன் பிரவீனை சராமாரியாக தாக்கியுள்ளார்.

அந்த காணொளிதான் உலகம் முழுக்க (Viral) தெறிக்கிறது.

லொறி மோதலில் காயமடைந்த IP மைத்திரிபால இப்போது களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் இஸ்மாயில் ரிபைடீனும், பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்திய கலைமகன் பிரவீனும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.