வவுனியாவில் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் அதிகரிப்பு

வவுனியா செய்திகள் – பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் அதிகரிப்பு

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்ற 28 மாணவர்கள் கடந்த 3 மாதங்களில் பாடசாலையை விட்டு இடை விலகியுள்ளனர்.

அவர்களை மீள இணைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் கே. சுலோஜனா தெரிவித்துள்ளார்.

சிறுவர், பெண்கள் பாதுகாப்பு தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலப்பகுதியில் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில் இருந்து 28 மாணவர்கள் இடை விலகியுள்ளதாக கிராம அலுவலர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் இடை விலகியமைக்கான காரணத்தை கண்டறிந்து அவர்களை மீளவும் பாடசாலை கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் கிராம அலுவலர்கள் மற்றும் எமது பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், பாடசாலை இடைவிலகும் மாணவர் விபரத்தை அதிபர்கள் எமது பிரதேச செயலகத்திற்கு வழங்கினால் அவர்களை மீள் இணைப்பதற்கான நடவடிக்கைகளை கிராம அலுவலர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஊடாக முன்னெடுக்க முடியும் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

You may also like...