​பொலிஸார் அதிகாரி ஒருவர் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? அஜித் ரோஹணவின் புதிய விளக்கம்

பொலிஸ் அதிகாரி ஒருவரினால் காரணமின்றி தாக்குதல் மேற்கொள்ளுதல் அல்லது அதிகாரத்தை பயன்படுத்தினால் அந்த நபர், பொலிஸ், பொலிஸ் தலைமையகம் அல்லது பொலிஸ் உயர் அதிகாரியிடம் முறைப்பாடு செய்ய முடியும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு அல்லது உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இன்றி சீருடையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிக்கு எதிராக அதிகாரத்தை பயன்படுத்த முடியாதென அவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தவறான தகவல்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பன்னிப்பிட்டி பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருந்தது.

தனிப்பட்ட பாதுகாப்பிற்கான உரிமையைப் பயன்படுத்துவதற்கான அளவுகோல்கள் தண்டனைச் சட்டத்தின் 89 முதல் 99 பிரிவுகளில் உள்ளன எனவும், குறிப்பாக 92 மற்றும் 93 வது பிரிவுகளின் விதிகளுக்கமைய தனிப்பட்ட பாதுகாப்பு உரிமையை பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

92, 93 மற்றும் 96 பிரிவுகளுக்கமைய அரச ஊழியர் ஒருவர் தனது சீருடையில் அதிகாரத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் அதற்கு எதிராக தனிப்பட்ட பாதுகாப்பு உரிமையை பயன்படுத்த முடியாதென அதில் குறிப்பிடப்படுகின்றது.

அதனை தவறாக புரிந்துக் கொண்டு சீருடையில் இருக்கும் அதிகாரிகளை தாக்க முடியும் என சமூக வலைத்தளங்களில் உள்ள செய்தி முழுமையாக தவறானதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like...