யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 2000 அபராதம்

யாழ்ப்பாணம் மாநகரத்தின் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினாலும், வெற்றிலை எச்சில் துப்பினாலும் தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குப்பைகளை கொட்டினால் 5000 ரூபா தண்டப் பணமும், வெற்றிலை எச்சில் துப்பினால் 2 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் அறவிடப்படும் என அவர் இன்று அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளை, யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ள மாநகர காவல்படை மேற்கொள்ளும் என அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர எல்லையை தூய்மையான நகரமாக பேணும் நோக்குடன், மாநகர சபை ஊழியர்கள் ஐந்து பேரை கொண்ட, மாநகர காவல் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பிலுள்ள ஊழியர்களுக்கு சீருடையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று முதல் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

You may also like...