ஜனாதிபதி தன்னை அச்சுறுத்தியதாக விஜேதாஸ ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு

விஜேதாஸ ராஜபக்ஷ இன்று வௌியிட்ட அதிரடி அறிவிப்பு

போர்ட் சிட்டி திட்டத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட காரணத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை 9 மணியளவில் தொலைபேசியில் அழைத்து தன்னை எச்சரித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் விசேட ஊடக சந்திப்பை நடத்தி அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.

விஜேதாஸ ராஜபக்ஷ இன்று நடத்திய விஷேட ஊடக சந்திப்பில் கூறியது

ஜனாதிபதி, நாட்டின் தலைவராக இல்லாமல் தன்னை கெட்ட வார்த்தையினால் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததாக விஜேதாஸ ராஜபக்ஷ கூறினார்.

மிகவும் கேவலமான முறையில் ஜனாதிபதி தன்னை திட்டியதாகவும், அதேபோன்று அதற்கு தானும் பதில் வழங்கியதாகவும் விஜேதாஸ ராஜபக்ஷ கூறினார்.

ஜனாதிபதி ஒருவர் இதுபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்துவதால், எமக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறினார்.

போர்ட் சிட்டி திட்டத்தின் ஊடாக அமைக்கப்படும் ஆணைக்குழுவினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதுபோல சீனக் கொலணியாகவே இலங்கை மாற்றமடையும் என்று தான் தெரிவித்தமைக்காக ஆத்திரங்கொண்ட ஜனாதிபதி இவ்வாறு திட்டியதாக அவர் கூறினார்.

ஜனாதிபதி பேசிய மொழி மிகவும் கீழ்த்தரமாக இருந்ததால், அதேபோன்ற மொழியில் பதில் வழங்க தனக்கும் நேரிட்டதாக அவர் கூறினார்.

அதன் காரணமாக பொலிஸ்மா அதிபரிடம் தான் தனது உயிர் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக முறையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விஜேதாஸ ராஜபக்ஷ நேற்றைய ஊடக சந்திப்பில் கூறியது என்ன?

கோட்டாபய ராஜபக்ச பசில் ராஜபக்ச ஆகியோரின் பிள்ளைகள் அமெரிக்காவின் பிரஜாவுரிமை பெற்றவர்கள்.

அவர்கள் விடுமுறைக்கு இலங்கை வந்து, நாட்டை கொள்ளை அடித்துவிட்டு, உங்கள் பிள்ளைகளுக்கு நாடொன்றை இல்லாமலாக்கி விட்டு அங்கு சென்று விடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, இந்த நாட்டில் எந்த தீர்மானமும் எடுப்பதில்லை. தீர்மானங்களை எடுப்பது மிஸ்டர் டுவண்டி பஸில் ராஜபக்சவே என்று கூறினார்.

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தது நாங்கள் தான் ஆனால் இன்று ராஜபக்சக்கள் நாட்டுக்கு ஒரு சாபம் என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்.

ஜனாதிபதி நாட்டு மக்களை சந்திக்கும் சிறுபிள்ளைத்தனமான நிகழ்வுகளை நிறுத்த வேண்டும்.
நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை.

நாட்டு மக்களை சந்திக்க நாங்கள் ஆயிரக்கணக்கான பிரதேச சபை உறுப்பினர்களை நியமித்துள்ளோம்.

சீனாவுடன் தொடர்பு வைத்துள்ளதால் அமெரிக்கா இந்தியா ஜப்பான் போன்ற நாடுகள் எம்மை தாக்குகின்றன என மேலும் தெரிவித்தார்.

முப்பது வருட யுத்தத்தை முறித்த மகிந்த ராஜபக்சவுக்கு இந்த நாட்டு மக்கள் ஆளும் அதிகாரத்தை வழங்கி இருந்தார்கள்.

ஆறு வருடங்களுக்கு வழங்கப்பட்ட அந்த அதிகாரத்தில் நான்கு வருடங்களிலேயே வீட்டுக்கு அனுப்பியது யார்? பசில் ராஜபக்ச தான் என்று விஜேதாஸ ராஜபக்ஷ நேற்றைய ஊடக சந்திப்பில் கூறினார்.

You may also like...