11 இஸ்லாமிய அமைப்புக்கள் தடை; சர்வதேச யூதர்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள கண்டனம்

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற பெயரில் மோசமான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்ற இலங்கையின் நிறைவேற்றதிகார போக்கின் தன்மையே தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச யூதர்கள் ஆணைக்குழு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடை தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே மிகவும் ஆழமான குறைபாடுகளைக் கொண்டிருந்த பயங்கரவாத்தடைச் சட்டத்தின் மூலம் மேலும் வன்முறைகளும் மீறல்களும் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும்.

பயங்கரவாதத்தடை தொடர்பான விதிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது.

அதில் 11 அமைப்புகள் ‘தீவிரவாத அமைப்புகளாக’ இனங்காணப்பட்டிருப்பதுடன் இதுபோன்ற அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாறாக செயற்படுபவர்களை 20 வருடங்களுக்கும் அதிகமான காலம் சிறைப்படுத்தவும், அத்தகைய செயற்பாடுகள் அல்லது அவற்றை முன்னெடுப்போருடன் தொடர்புகளைப் பேணியவர்களை 10 வருடங்களுக்கும் அதிகமான காலம் சிறைப்படுத்தவும் முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற பெயரில் மோசமான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்ற இலங்கையின் நிறைவேற்றதிகாரப் போக்கின் தன்மையே தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது.

எவ்வித விசாரணைகளுமின்றி ஒருவரை இருவருட காலம் வரை தடுத்துவைப்பதற்கு அனுமதியளிக்கும் தீவிரமயமாக்கலை ஒழித்தல் தொடர்பான விதிமுறைகள் வெளியிடப்பட்டு ஒரு மாதகாலத்தின் பின்னர் இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் தொடர்பான அடிப்படைத் தராதரங்களை மீறுவதற்கான நியாயமாக தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தைக் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You may also like...