இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி இன்று (21) இரவு 09.15 மணியளவில் வௌியான அறிக்கைப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 155 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 516 ஆக அதிகரித்துள்ளது..

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 97,988 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,668 ஆகும்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வடக்கில் கொரோனா வைரஸ் தொற்று நிலவரம்

யாழ்ப்பாணம் மாவட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 11 பேர் உள்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 788 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

இதில் 21 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்.

பொலிஸ் நிலையத்தில் கோரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட உத்தியோகத்தர்களுடன் நெருங்கிய தொடர்புடைய அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள்.

மன்னார் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலவரம்

மன்னார் மாவட்டத்தில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் மன்னார் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு கோரோனா அறிகுறிகளுடன் சென்றவர்கள். ஒருவர் வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்றவர்.

மல்லாவி வைத்தியசாலைக்குச் சென்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் நிலைமை காணப்படுவதால், அதனை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் இடம்பெற்ற மதிப்பாய்வு கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாளொன்றில் மேற்கொள்ளப்படும் பீசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 15,000 வரை அதிகரித்தல் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

You may also like...