அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்க சுகாதார அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானங்கள்

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் நிலைமை காணப்படுவதால், அதனை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் இடம்பெற்ற மதிப்பாய்வு கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த சில நாட்களாக நிலவிய பொதுமக்களின் நடத்தைக் கோலங்களின் காரணமாக நாட்டினுள் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் நிலைமை காணப்படுகிறது.

அதற்கமைய, இன்றைய கூட்டத்தின்போது, அவசர சிகிச்சை பிரிவுகளில் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், கொரோனா தொற்றாளர்களுக்கு தேவையான ஹை ப்ளோ (High Floor) ஒட்சிசனை வழங்குதல், தகவல் திரட்டும் பணிகளை பலப்படுத்தல் மற்றும் வைத்தியர்கள், தாதிகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு மேலதிகமாக பாதுகாப்பு அங்கிகளை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளவதென தீர்மானிக்கப்பட்டது.

அவ்வாறே கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் நோய் நிலைமைகளின் அடிப்படையில் அவர்களை வெவ்வேறாக, பொருத்தமான வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கு திட்டமிடல், கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் மேலும் பல வைத்தியசாலைகளை இனங்காணல் மற்றும் அவற்றுக்கு தேவையான வைத்திய வசதிகளை வழங்குதல், கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் அதேவேளை தினசரி மற்றைய நோயாளிகளுக்கான சிகிச்சைகளை தடையின்றி வழங்குதல் போன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறே நாளொன்றில் மேற்கொள்ளப்படும் பீசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 15,000 வரை அதிகரித்தல் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுத்தல் என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளிலிருந்து வருகைதருவோருக்கான விசேட தனிமைப்படுத்தல் சட்டத்தை தயாரிப்பதற்கு இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.

You may also like...