நாட்டில் கொரோனா பரவல் குறித்து வௌியிடப்பட்ட விஷேட அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


நாட்டில் கொரோனா பரவல் குறித்து வௌியிடப்பட்ட விஷேட அறிவிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விஷேட தகவல்கள் இன்று கொவிட் தடுப்பு மத்திய நிலையத்தால் வௌியிடப்பட்டன.

அதன்படி, எதிர்வரும் தினங்களில் ஏதாவது ஒரு பிரதேசத்தில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் பதிவாவதாக இருந்தால் குறித்த பிரதேசத்தை கட்டாயமாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனினும் எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது நகரங்களுக்கு இடையில் பயணப்பத்தை குறைத்துக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனை அறிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவித்த விடயங்கள்,

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா?

நாட்மை முடக்கவோ, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கவோ அல்லது வேறு சட்டங்களை அமுல்படுத்தவோ எந்தவித தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

வார இறுதியில், மாவட்டங்களுக்கு இடையிலான நடமாட்டங்களைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதையும், சுற்றுலாக்களை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் எதிர்வரும் நாட்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

சித்திரைப் புத்தாண்டு காலத்தில், பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்காமையே இதற்கான காரணமாகும் என அவர் கூறினார்.

இதேவேளை, ஏதாவது ஒரு இடத்தில் குறிப்பிடத்தக்களவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால், அப் பகுதியை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை

நாட்டில் இதுவரை தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 98,722ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94,036 ஆக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை

விமானப் பயணிகளின் மூலம் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

விமானப் பயணிகள் ஒன்றிணைவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. சகல விமானப் பயணிகளும் சுகாதார சட்டங்களை பின்பற்றுவது அவசியமாகும்.

அத்தியாவசிய விமானப் பணியாளர்களை மாத்திரம் நாளை தொடக்கம் சேவைக்கு அழைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.