வீடு மாறிச் சென்ற இரண்டு பெண்களின் சடலங்கள் – வைத்தியசாலையில் ஏற்பட்ட பதற்றம்

இரண்டு பெண்களின் சடலங்கள் மாறியதால் நிகவெரடிய ஆதார வைத்தியசாலையில் சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மஹவ பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரினதும் மற்றும் நிகவெரடிய பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரினதும் சடலங்களே இவ்வாறு மாறியுள்ளன.

அதன்படி, நேற்றையதினம் (30) 67 வயதுடைய பெண்ணின் உடல் மஹவ பிரதேசத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பூதவுடலை மஹவ பிரதேசத்தில் அமைந்துள்ள மின் மயானத்திற்கு கொண்டு வந்து இறுதிக் கிரியைகளை செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், நிகவெரடிய பிரதேசத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அவரின் சடலத்தை பெற்றுக் கொள்ள வைத்தியசாலைக்கு வந்த போது சடலம் மாறியுள்ளதை அறிந்த பின்னர் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது, கருத்து தெரிவித்த உயிரிழந்த பெண்ணின் பேரன் இவ்வாறு தெரிவித்தார்.

´எனது பாட்டிதான் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் சுகயீனம் காரணமாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்து வரும் போது உயிரிழந்தார். பின்னர் பிசிஆர் பரிசோதனைக்காக குருணாகலைக்கு அனுப்பி வைத்தார்கள். இன்று உடலை பெற்றுக் கொள்ள வைத்தியசாலைக்கு வந்தோம். பிரேத அறைக்கு சென்று பார்த்தோம். அங்கு இரண்டு மூன்று உடல்கள் இருந்தன. எனினும் எனது பாட்டியின் உடல் இருக்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டதற்கு உரிய பதிலை எவரும் கூறவில்லை´. என்றார்.

இது தொடர்பில் வைத்தியசாலையில் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ள அவர்கள், நிகவெரடிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை, வைத்தியசாலையின் உயரதிகாரிகளினால் இது தொடர்பில் தீர்மானம் ஒன்று பெற்றுக் கொடுக்கும் வரையில் தனக்கு எதுவும் கூறமுடியாது என வைத்தியசாலையின் தாதியர் ஒருவர் அவ்விடத்திற்கு வந்து தெரிவித்திருந்தார்.

You may also like...