ரிசாத் பதியுதீன் தொடர்பில் விசாரணை செய்யும் இந்தியப் புலனாய்வுப் பிரிவு

2019, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 2021, ஏப்ரல் 24 ஆம் திகதி இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் கேரள தொடர்புகளை இந்திய புலனாய்வுப் பணியகம் மற்றும் கேரள காவல்துறையினர் விசாரணை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்திய செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. கேரளாவில் பதியுதீன் கொண்டிருந்த தொடர்புகளின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

எனினும் 2009 ஆம் ஆண்டில் அவர் காசர்கோடு என்ற இடத்துக்கு சென்றமை, கேரளாவில் ஒரு சில மதத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு ஆகியன விசாரணை செய்யப்படவுள்ளன.

உளவுத்துறை அதிகாரிகளின்படி, ரிஷாத்தின் தந்தை காசர்கோடு பட்னாவைச் சேர்ந்தவர், அவர் குறித்த பகுதியில் ஒரு சிலருடன் தொடர்பு கொண்டிருந்தார்.

இந்தநிலையில் ஏற்கனவே, இந்திய புலனாய்வுப் பணியகம் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆகியவை விசாரணையில் இலங்கை அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன,

மேலும் இலங்கையின் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது ஆட்களுடன் தொடர்பு கொண்டதற்காக 2019 ஜூன் மாதம் தமிழகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியான ஹஷ்மியின் வாக்குமூலத்தையும், கைது செய்யப்பட்ட இலங்கை அரசியல் தலைவரின் தொடர்புகளை கேரள காவல்துறை ஆராயும் என்று கேரள மாநில காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹெரா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் பதியுதீன் ஏப்ரல் 2020 இல் கைது செய்யப்பட்டார், ஆனால் ஆதாரங்கள் இல்லாததால் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை ஐ.எஸ்ஸில் சேருவதற்காக 2016 ல் பட்னாவிலிருந்து சிரியாவுக்கு ஐந்து இளம் முஸ்லீம் குடும்பங்கள் காணாமல் போயுள்ள விடயம் மற்றும் பதியுதீனின் காசராகோட் தொடர்பும் விரிவாக ஆராயப்படும் என்று இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ஐந்து முஸ்லிம் குடும்பங்களும் சிரியாவுக்கு செல்லும் முன்னர் இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத்திடம் மதப் பயிற்சி பெற்றதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தமையும் மீண்டும் இந்திய புலனாய்வு பிரிவால் விசாரிக்கப்படவுள்ளன என்று இந்திய செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

You may also like...