காய்ச்சலுக்கு மருந்து குடித்து விட்டு வயலுக்கு சென்றவர் பலி

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காய்ச்சல் என கூறி மருந்து குடித்து விட்டு வயலுக்கு சென்றவர் உயிரிழந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

மொரவெவ – நாமல்வத்த, பத்தாம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த ஏ.ஜி. விஜயதிஸ்ஸ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் காரணமாக தனியார் மருந்தகம் ஒன்றில் மருந்து எடுத்து குடித்துவிட்டு வழமைபோன்று இவர் வயலுக்குச் சென்றுள்ள நிலையில் அவருடைய வயலுக்கு அருகிலுள்ள வயல் உரிமையாளரை கையால் கூப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து வயல் உரிமையாளர் அங்கு சென்று குறித்த நபரை வயலில் இருந்து தூக்கிக்கொண்டு வந்து முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு வரும் வழியில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன் இவருடன் தொடர்புபட்டவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர். மரணம் தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You may also like...