தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்; அடுத்த முதல்வர் யார்?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வௌிவரத் தொடங்கியுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பான வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது.

தற்போதைய நிலவரப்படி மொத்தம் 231 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. இதில், மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களை விட அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

திமுக கூட்டணி 132 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 99 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். இதனால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இதேபோல் அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அமைச்சர்கள் முன்னிலையில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(மே 2ஆம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதல் கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணி நடந்துவருகிறது. சில தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களைத் திறந்து எண்ணத் தொடங்கிவிட்டனர்.

இதில் திமுக அதிமுக முக்கியத் தலைவர்கள் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது எடப்பாடி தொகுதியிலும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமது கொளத்தூர் தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் – 2021 – ஓபிஎஸ் பின்னடைவு

தபால் வாக்குகளில் முன்னிலையில் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடும் நெருக்கடியை போடி தொகுதி வாக்காளர்கள் அளித்துள்ளனர்.

போடி சட்டமன்ற தொகுதியில் இரண்டம் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி, திமுக 6538 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக 6414 பெற்றுள்ளது.

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு கடும் போட்டியாளராக விளங்கும் தங்க தமிழ்செல்வன் தற்போது முன்னிலையில் இருக்கிறார். போடி தொகுதியில் 2011 மற்றும் 2016ல் பன்னீர்செல்வம் வெற்றிபெற்றிருந்தார்.

தற்போது அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுகசார்பில் போட்டியிட்டுள்ள தங்கதமிழ்செல்வன் மற்றும் அமமுக சார்பில் போட்டியிட்டுள்ள முத்துசாமி ஆகிய மூவரும் பல ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தவர்கள் என்கிறார் பிரமிளா.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 –  பல அமைச்சர்கள் பின்னடைவு

அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் சிலர் பின்னடைவை சந்தித்துள்ளனர் என்கிறார் எமது செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன்.

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மதுரவாயல் தொகுதியில் பெஞ்சமின், விழுப்புரம் தொகுதியில் சி வி சண்முகம்,ஆவடி தொகுதியில் மாஃபாய் பாண்டியராஜன், ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கோவில்பட்டி தொகுதியில் தபால் வாக்குகளில் முதலில் அமமுகவைச் சேர்ந்த டிடிவி தினகரன் முன்னிலை வகித்தார். தற்போது இவிஎம் வாக்கு எண்ணிக்கையின் படி, அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் உள்ளார் என்கிறார் பிரமிளா.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர்.

மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 75 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

தமிழ்நாடு தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மாநிலம் முழுவதும் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அவற்றில் 16,387 ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினார்கள். இந்த தேர்தலை கண்காணிக்க ஒரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது.

தமிழ்நாட்டில் வாக்களிக்க தகுதி பெற்ற 6.29 கோடி வாக்காளர்களில் 4.58 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை செலுத்தினர். இந்த தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழக தேர்தல் பரப்புரைகளின்போது கட்டுக்கடங்காமல் மக்கள் கூட்டம் கூடியது. பிறகு மாநிலத்தில் பரவலாக கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், இது குறித்து தனது கடும் அதிருப்தியை சென்னை உயர் நீதிமன்றம் பதிவு செய்திருந்தது.

மேலும், கொரோனா வழிகாட்டுதல்களை கட்டாயம் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தேர்தலில் கோவிட்-19 வழிகாட்டுதல்களை பின்பற்றி பிறருக்கு எடுத்துக்காட்டாக அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் திகழ வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. அவற்றைப் பின்பற்றியே இன்றைய வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

You may also like...