உயிராபத்தை ஏற்படுத்தும்; உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை

ஒருவாரக்காலப் பகுதியில் நபரொருவர் நீண்ட நேரம் வேலை செய்வது உயிராபத்தை விளைவிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் வேலை செய்வதால் ஊழியர்களுக்கு ஏற்படும் உடல்நிலை பாதிப்பு, மரணங்கள் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) 2000-2016 காலக்கட்டத்தில் உள்ள தரவுகளை வைத்து சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO)இணைந்து ஆய்வொன்றை நடத்தியது.

இதில், நீண்ட நேரம் வேலை பார்த்த ஊழியர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதய நோய் என்பன ஏற்பட்டு அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

முதல் முறையாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு தொடர்பில், சர்வதேச சுற்றுச்சூழல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் நீண்ட நேரம் வேலை செய்தவர்களில் பக்கவாதம் மற்றும் இதய நோயால் 745,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 2000 ஆமாம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்பை விட 30 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் (72%) ஆண்கள் மற்றும் நடுத்தர வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

பணியில் இருந்த காலங்களில் ஏற்பட்ட மரணங்களைவிட, வாழ்க்கையின் பிற்பகுதியில் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட மரணங்களே அதிகம்.

194 நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட தரவுகளின்படி, ஒரு வாரத்தில் 55 மணிநேரம் அல்லது அதற்கு அதிகமான நேரம் பணியாற்றுவதால் 35 சதவீதம் பக்கவாதம் ஏற்படவும், 35 மணி முதல் 40 மணி நேரம் வேலை பார்ப்பதால் 17 சதவீதம் உயிரிழப்பை ஏற்பட்டுத்தும் இதய நோய்கள் ஏற்படுகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியாவை உள்ளடக்கிய உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்ட பகுதியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...