தொழிலுக்கு சேரும் வயதை அதிகரிக்கவும், சிறுவர் உயர் நீதிமன்றங்கள் அமைக்கவும் தீர்மானம்

தமிழ் ​செய்திகள் இன்று


தொழிலுக்கு சேரும் வயதை அதிகரிக்கவும், சிறுவர் உயர் நீதிமன்றங்கள் அமைக்கவும் தீர்மானம்

ஊழியர்களை தொழிலுக்கு இணைத்துக்கொள்ளும் வயதெல்லையை 18 ஆக அதிகரிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேலும் இரண்டு மாதங்களில் அதனை நாடாளுமன்றில் முன்வைத்து சட்டமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

1956ஆம் இலக்க 47ஆம் சரத்தின் படி, 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொழில்களுக்கு செல்லும் சந்தர்ப்பம் காணப்பட்டது.

எவ்வாறாயினும், கடந்த ஜனவரி மாதம் தொழிலுக்கு செல்வதற்கான வயதெல்லை 16ஆக அதிகரிக்கப்பட்டது.

இதன்படி, 16 வயதுடைய ஒருவரை வேலைக்கு அமர்த்தினாலும், அவரை ஆபத்தான தொழில்களில் ஈடுப்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சிறுவர் தொழிலாளர்களை இல்லாது செய்யும் நோக்கில் புதிய திருத்தத்தின் அடிப்படையில் ஊழியர்களை தொழிலுக்காக உள்வாங்கும் வயதெல்லையினை 18 ஆக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை ஆபத்துக்கள் நிறைந்த 52 தொழில்கள் கண்டறியப்பட்டுள்ளதோடு, புதிய திருத்தத்தின்படி 76 தொழில்கள் ஆபத்துக்கள் நிறைந்த தொழில் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

தொழில், நீதி மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர மாகாண மட்டத்தில் சிறுவர்கள் தொடர்பான நீதவான் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அமைக்கப்படவுள்ளன.

நாட்டில் இவ்வாறான நீதிமன்றங்கள் இரண்டு மாத்திரமே உண்டு. சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை தீர்ப்பதற்கு இவை போதுமானதல்ல.

இதேபோன்று, வழக்கு விசாரணை சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் வயதானவர்களுடன்பிரச்சினைகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகின்றது. சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் ஒத்திவைக்கப்படுகின்றமையும் நிலவுகின்றது.

இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு, அனைத்துமாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில், இவ்வாறான நீதிமன்றங்கள் 18ஐ அமைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டிருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை யின் பிரதித் தலைவி சுஜாதா அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாட்டில் காலம் கடந்த சிறுவர்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.