விலை அதிகரிக்கப்பட்டுள்ள மற்றொரு பொருள்

வரி அதிகரிப்புக் காரணமாக, மாதவிடாய்த் துவாய்களின் (Sanitary Napkin or Pad) விலை 15 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனை கவனத்துக்கு கொண்டு, அதற்கான கட்டுப்பாட்டு விலையைக் கொண்டு வர வேண்டுமெனவும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் சமுதாய ஒருங்கிணைப்பாளர் கே.சிவஜோதி தெரிவித்தார்.

சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் தினமான நேற்று (08) திருகோணமலை ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமத்துவத்துடன் பெண்களின் உரிமைகளை பேண அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டுமெனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

மாதவிடாய் காலத்தின் போது, 30 சதவீதமான பெண்களே மாதவிடாய்த் துவாய்களைப் பயன்படுத்துகின்றனர் எனவும் ஏனைய கிராமிய மட்ட பெண்கள் துணி வகைகளையே பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பெண்கள், மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியமற்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆடைத் தொழிற்சாலை உள்ளிட்ட வேலைத் தளங்களில் பெண்களுக்கான பிரத்தியேகமான மலசலகூட வசதி இல்லை எனவும் ஆண்களுக்கான மலசலகூட வசதியையே பெண்களும் பாவிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்த அவர், இது விடயத்தில் அரசாங்கம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, ஆடைத் தொழிற்சாலைகளில் பெண்கள் எட்டு மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்கிறார்கள் எனத் தெரிவித்த அவர், இதைச் சாமாளிக்க மாதவிடாய்க் காலத்தில் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

இதனால், சுமார் மூன்று மாதங்கள் காலம் தாழ்த்திய மாதவிடாய் ஏற்படுவதுடன், கர்ப்பப் பை பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்த விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் சமுதாய ஒருங்கிணைப்பாளர், எனவே, பெண்களுக்கான சமத்துவ நிலை என்ற அணுகுமுறை ஊடாக இவ்விடயங்களில் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

You may also like...