புறக்கோட்டையில் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த பரிதாபநிலை

தமிழ் ​செய்திகள் இன்று


புறக்கோட்டையில் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த பரிதாபநிலை

புறக்கோட்டை பிரதான வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் சுமார் 70 மீற்றர் தூரத்திற்கு இழுத்துக்கொண்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புறக்கோட்டை பிரதான வீதியில் வாகனங்களை நிறுத்த முடியாத இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் உரிய பொலிஸ் உத்தியோகத்தர் அவதானித்துள்ளார் .

இதுதொடர்பாக அங்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது யாருடையது என தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

எனினும், சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் வந்து அதனை இயக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

அவ்வேளையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வந்து இங்கு மோட்டார் சைக்கிள் நிறுத்திய குற்றச் செயல் தொடர்பில் விசாரணை செய்ய முற்படுகையில் மோட்டார் சைக்கிளை இயக்கியவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளை எட்டிப்பிடித்துள்ளார் உரிமையாளர் மோட்டார் சைக்கிளை செலுத்தியதுடன் பிடித்த பொலிஸ் உத்தியோகத்தரை வீதியில் இழுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் சுமார் 70 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதி சரிந்துள்ளது.

இதனையடுத்து பிரதான வீதியில் மக்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவரை தப்பிச் செல்ல விடாமல் தடுத்து வைத்திருந்ததுடன் அந்த பொலிஸ் உத்தியோகத்தரை தூக்கி உதவி செய்தனர்.

சம்பவத்தில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.