நாடு முழுவதும் மின்வெட்டு தொடரும்

தமிழ் ​செய்திகள் இன்று


நாடு முழுவதும் மின்வெட்டு தொடரும்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின்சார துண்டிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை இன்னும் சில நாட்களுக்கு நாளாந்த மின் துண்டிப்பு தொடரும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசியம் கருதி, தினசரி மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிவரை இந்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

எவ்வாறாயினும், கோளாறு ஏற்பட்டுள்ள மின்பிறப்பாக்கியிலிருந்து தொடர்ச்சியாக எண்ணெய் கசிவு ஏற்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார மானவடு தெரிவித்துள்ளார்.

மேலும், மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தேசிய மின் விநியோகக் கட்டமைப்பில் சமநிலையை பேணமுடியாததால் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், கோளாறை சீர்செய்வதற்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பதை உறுதியாகக்கூற முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.