அம்பாறையில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மூன்று பொலிஸார் சுட்டுக்கொலை

தமிழ் ​செய்திகள் இன்று


அம்பாறையில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மூன்று பொலிஸார் சுட்டுக்கொலை

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு இந்த பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதுடன், மக்கள் மத்தியில் பீதி நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது,காயமடைந்தவர்கள் கல்முனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில், இவ்வாறு உயிரிழந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டில் நவீனன் என்ற இளம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளதுடன்,உயிரிழந்தவரின் புகைப்படமும் சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதேவேளை, பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுமுறை தொடர்பான பிரச்சினை காரணமாக, திருக்கோவில் காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, அங்கிருந்த தப்பிச் சென்ற துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர், எத்திமலை காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து, இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகளும், 19 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.