திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலதிக தகவல்கள் வௌியாகின

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு (24) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்றின் நீதிபதி எம்.எச்.முகமட் ஷம்சா நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸார் பலியானதுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் மேலும் இரு பொலிஸார் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் தமிழர், முஸ்லிம் என இரு பொலிஸாரும் சிங்களவர் இருவருமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சார்ஜன் தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரி இரு துப்பாக்கி மற்றும் ரவை குண்டுகளுடன் அவரது சொந்த வாகனத்தில் தப்பிச் சென்று தனது தாயை பார்த்த பின்னர் அவரது சொந்த ஊரான மொனராகலை மாவட்டத்தின் எதிமலை பிரதேச பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறையில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மூன்று பொலிஸார் சுட்டுக்கொலை

குறித்த சம்பவத்தில் பாண்டிருப்பை சேர்ந்த நவீனன் மற்றும் ஒலுவிலை சேர்ந்த அப்துல் காதர், பிபில மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களை சேர்ந்த துசார, பிரபுத்த உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர் மரணமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன் பொலிஸ் நிலையத்தில் முன்காவல் கடமையில் இருந்த பொலிஸார் ஒருவரின் துப்பாக்கியை பறித்தே ஏனைய உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.

இவர் பொலிஸ் நிலையத்தில் சிவில் உடை தரித்து உள்ளக கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டவர் எனவும் விடுமுறை கோரிய நிலையில் வழங்கப்படாமையினாலேயே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலங்கள் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய ஆதார வைத்தியசாலைகளின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் மட்ட உயர் அதிகாரிகள் மற்றும் விசேட தடயவியல் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like...