அரச ஊழியர்கள் வௌிநாடு செல்ல வாய்ப்பு – இன்றுமுதல் அமுல்

அரச ஊழியர்கள் வௌிநாடு செல்ல இன்றுமுதல் வாய்ப்பு

அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் சுற்றறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சினால் இந்த விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச ஊழியர்கள் தமது சேவைக்காலத்தில் 5 வருடங்களுக்கு உட்பட்டு, வெளிநாடு செல்வதற்கு சம்பளமில்லாத விடுமுறையினை பெற்றுக்கொள்ள முடியுமென அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாபன விதிக்கோவையில் தற்போதுள்ள ஏற்பாடுகளுக்கு புறம்பாக மறுஅறிவித்தல் வரை விசேட ஏற்பாடுகளின் கீழ் அரச ஊழியர்கள் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சம்பளமில்லாத விடுமுறை வழங்க கடந்த 13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது.

வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் ஏற்பாடுகளுக்கு அமைய வெளிநாடு செல்லும் அனைத்து உத்தியோகத்தர்களும் உள்நாட்டு வங்கி முறைமையினூடக தமது பெயரில் ஆரம்பிக்கப்படும் NRFC எனப்படும் வதியாதோர் வெளிநாட்டு கணக்கிற்கு பணம் அனுப்பீடு செய்ய வேண்டும்.

இதன்படி, ஆரம்ப நிலை சேவை வகுதியைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மாதந்தம் 100 அமெரிக்க டொலர்களையும்இரண்டாம் நிலை சேவை வகுதியைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மாதந்தம் 200 அமெரிக்க டொலர்களையும்

மூன்றாம் நிலை சேவை வகுதியைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மாதந்தம் 300 அமெரிக்க டொலர்களையும்

நிறைவேற்றுத்தர சேவை வகுதியைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மாதந்தம் 500 அமெரிக்க டொலர்களையும் அனுப்பீடு செய்ய வேண்டும்.

அரச ஊழியர்கள் வௌிநாடு ஒன்றில் தொழில் செய்யும் போது குறித்த பணத்தை அல்லது தொழில் மூலம் கிடைக்கும் சம்பளத்தில் 25 சதவீதத்தை அனுப்பீடு செய்ய முடியும்

இவ்வாறு பணம் அனுப்பீடு செய்வதற்காக வெளிநாடு சென்றவுடன் 2 மாத நிவாரண காலம் வழங்கப்படுவதுடன், 3ஆவது மாதத்தில் இருந்து பணம் அனுப்ப வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் இன்று முதல் நடைமுறையாகும்.

மேலும் இன்றைய இலங்கை செய்திகள்

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்