விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் – கல்வி அமைச்சின் தீர்மானம்

தமிழ் ​செய்திகள் இன்று


விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் – கல்வி அமைச்சின் தீர்மானம்

விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் – கல்வி அமைச்சின் தீர்மானம்

மேல் மாகாணம், கொழும்பு வலயத்தினதும் அதனை அண்டிய நகரங்களிலும், ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை செவ்வாய், புதன், மற்றும் வியாழக்கிழமைகளில் முன்னெடுக்குமாறு கடந்த வாரம் கல்வி அமைச்சு அறிவுறுத்தியிருந்தது.

எனினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதேநேரம், கிராமிய பாடசாலைகள் கடந்த வாரத்தை போல் இயங்கும் அதேவேளை, ஆசிரியர்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்படின், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 தினங்களில் மாத்திரம் பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறும் தினத்தில் போக்குவரத்து காரணங்களுக்காக பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்கு அவர்களது தனிப்பட்ட விடுமுறையாக அது கருதப்படமாட்டாது என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை வீழ்ச்சியடையாது தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்காக மறுஅறிவித்தல் வரை குறைந்தளவிலான பணிக்குழாமினரை கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி,கே மாயாதுன்ன இதற்கான சுற்று நிருபம் ஒன்றை நேற்று சகல அரச நிறுவன பிரதானிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

எவ்வித பாதிப்பும் இன்றி நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு தேவையான குறைந்தபட்ச சேவையாளர்களை பணிக்கு அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இயன்ற வரையில் சேவையாளர்களை அலுவலகத்திற்கு அழைக்காது, அவர்கள் வீட்டில் இருந்து இணையவழியில் பணியாற்றுவதற்கு அனுமதிக்குமாறு அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களிடம் இருந்து நேரடி கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ளும் அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்களை பணிக்கு அழைப்பதற்கு நிறுவன பிரதானிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, அந்த காலப்பகுதியில் குறைந்தளவான எரிபொருளை பாவனைக்கு உட்படுத்தும் வகையில், போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

சகல கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை இணைய வழியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.