ஜனாதிபதி நாட்டிலிருந்து வௌியேறியது எப்படி?

தமிழ் ​செய்திகள் இன்று


ஜனாதிபதி நாட்டிலிருந்து வௌியேறியது எப்படி?

ஜனாதிபதி நாட்டிலிருந்து வௌியேறியது எப்படி?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று அதிகாலை நாட்டிலிருந்து வெளியேறி மாலைதீவுக்கு சென்றுள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 1.45 அளவில் இலங்கை வான்படைக்கு சொந்தமான அண்டோனோ 32 ரக விமானத்தில், ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியுடன், அவரது பாரியாரும், அவர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பிபிசி, சி.என்.என், அல்ஜசீரா உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளதாக தகவல்களை மேற்கோள்காட்டி பிபிசி தெரிவித்துள்ளது.

எனினும், அது குறித்து இதுவரையில் தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவரதன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து இன்று காலை எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த சபாநாயகர், ஜனாதிபதியின் பதவிவிலகல் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி பயணித்த விமானம் மாலைத்தீவில் உள்ள மாலே நோக்கிச் சென்றதாகவும், குறித்த விமானம் மாலைத்தீவு நேரப்படி அதிகாலை 2.50 மணிக்கு தரையிறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியாக இருக்கும் போது வழக்கு விசாரணையில் இருந்து விலக்கு பெறும் சர்வாதிகாரத் தலைவர், புதிய நிர்வாகத்தால் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக பதவி விலகுவதற்கு முன் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல விரும்பியதாக நம்பப்படுகிறது.