அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் கண்டிப்பான உத்தரவு

தமிழ் ​செய்திகள் இன்று


அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் கண்டிப்பான உத்தரவு

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் கண்டிப்பான உத்தரவு

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு புறம்பாக செலவு ஏற்படுமாயின், அதற்கான செலவுகளுக்கு நிறுவனங்களின் தலைவர்களே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திறைசேரியின் செயலாளரால் குறிப்பிடப்பட்டுள்ள 26-04-2022 ஆம் திகதிய 3/2020 ஆம் இலக்க தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையின் “பொது செலவினங்களைக் கட்டுப்படுத்துதல்” என்ற தலைப்பிலான விதிகளின்படி அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர்.சமன் ஏக்கநாயக்க அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்களுக்கு இன்று (15) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மேற்கண்ட சுற்றறிக்கை ஏற்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், அதற்கு அப்பால் ஏற்படும் பிற பொதுச் செலவுகளை நிறுவன தலைவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளரின் சுற்றறிக்கையில் எரிபொருள் மற்றும் தகவல் தொடர்பாடல் கொடுப்பனவுகளை கட்டுப்படுத்தல், நீர் மற்றும் மின்சார கட்டணச் செலவுகளை கட்டுப்படுத்தல், கட்டடங்களை நிர்மாணித்தல் மற்றும் வாடகைக்கு பெறுதல் என்பவற்றை இடைநிறுத்தல், அரச செலவில் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்கள் நிறுத்தப்படல், அமைச்சரவையின் அனுமதியின்றி அமைச்சுக்கள் அல்லது நிறுவனங்களின் மட்டத்தில் வழங்கப்படும் பல்வேறு கொடுப்பனவுகளை இடைநிறுத்தல் மற்றும் புதிய வாக்குறுதிகளை வழங்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.