அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முக்கிய மூன்று தீர்மானங்கள்

தமிழ் ​செய்திகள் இன்று


அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முக்கிய மூன்று தீர்மானங்கள்

அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முக்கிய மூன்று தீர்மானங்கள்

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் சர்வதேச நாடுகளுக்கான பயணத்தினை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்டாயம் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய தேவை காணப்படுமாயின், அதற்கான உரிய நபர் அல்லது குறித்த பயணத்திற்கு பொருத்தமான குழு மாத்திரமே சர்வதேச நாடுகளுக்கான பயணத்தில் பங்கேற்க முடியும் என அமைச்சரவை சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவை முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கால்நடை தீவன உற்பத்திக்காக 25 ஆயிரம் மெட்றிக் டொன் சோளம் உள்ளிட்ட தானிய வகைகளை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமை, சோளம் உள்ளிட்ட ஏனைய பல்வேறு தானிய வகைகளை இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

கால்நடை தீவன உற்பத்திக்காக வருடாந்தம் ஆறு இலட்சம் மெட்றிக் டொன் சோளம் தேவைப்படுவதாகவும் அமைச்சரவையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்த வருடத்திற்குரிய இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் மெட்றிக் டொன் சோளத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு தேசிய சோள விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 2022/23 பெரும் போகத்திற்கான அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்காகவும் 06 மாத காலத்திற்கு கிளைபோசேட் களைக்கொல்லி இறக்குமதிக்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.