வடக்கில் ஹர்த்தால் மற்றும் மாணவர்களின் பேரணி!


வடக்கில் ஹர்த்தால் மற்றும் மாணவர்களின் பேரணி!

Hartal-and-rally-of-students-in-North-jaffna

Hartal-and-rally-of-students-in-North-Jaffna

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

யாழ். நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் யாழ்.நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன.

இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுதந்திர தினத்தைத் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர்களின் அபிலாசையைச் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து அரசாங்கம் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புக்கள், அடக்கு முறைகளை எதிர்த்தும், ஆக்கிரமிப்பாளர்கள் தமது மண்ணிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் பேரணி இடம்பெறுகிறது.

இன்றைய பொருளாதாரப் பின்னணியில் எழுந்துள்ள சூழலில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தை எனும் போலி நாடகத்தினை தோலுரித்து சர்வதேச சமூகத்திற்கு காட்ட வேண்டிய அவசியத்தாலும், கூட்டாக தமிழ் மக்கள் தமது நிலைப்பாடுகளை வலுவாக முன்வைக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையிலும் வடக்கிலிருந்து கிழக்கு வரையான பேரணியொன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தப் பேரணியில், சிவகுரு ஆதின முதல்வர் வேலன் சுவாமிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல நூற்றுக் கணக்காணோர் கலந்து கொண்டனர்.

போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் பல்கலைக்கழக வாயிலுக்கு முன்னால் கூடிய காவல்துறையினர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டங்கள் கூடுவதற்கும், வாகன ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடாத்துவதற்கும் தடை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வின் யாழ்ப்பாண மாவட்ட மட்ட நிகழ்வு துரையப்பா மைதானத்தில் இடம்பெற்றது

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 75 வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் செயலகம் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Hartal-and-rally-of-students-in-North-Jaffna