IPL 2016: சர்மா, பொல்லார்ட் விளாசல்,பெங்களூரை வீழ்த்தியது மும்பை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


IPL 2016: சர்மா, பொல்லார்ட் விளாசல்,பெங்களூரை வீழ்த்தியது மும்பை

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்–றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுலும் விராட் கோஹ்லியும் களமிறங்கினார்கள். தொடக்கத்திலே அதிரடி காட்டிய ராகுல் 14 பந்துகளில் 23 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ் ஆகியோர்களால் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்குதலை சமாளித்து ஓட்டங்கள் குவிக்க முடிவில்லை.

இதனால் விராட்கோஹ்லி (33), டிவில்லியர்ஸ் (29) ஓரளவு ஓட்டங்களுடன் வெளியேற பெங்களூர் அணி நெருக்கடிக்கு உள்ளாகியது.

இருப்பினும் இதன் பின்னர் வந்த அறிமுக வீரர் டிராவிஸ் ஹெட்டும், ஷர்பிராஷ் கானும் சிறப்பாக ஓட்டங்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 37 ஓட்டங்களும், ஷர்பிராஷ் கான் 18 பந்துகளில் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனால் 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 171 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக அணித்தலைவர் ரோஹித் சர்மா, பார்த்தீவ் படேல் களமிறங்கினர். பார்த்தீவ் படேல் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

இதன் பின்னர் ராயுடு- ரோஹித் சர்மா ஜோடி சிறப்பாக ஆடியது. ராயுடு 23 பந்தில் 31 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய ரோஹித் சர்மா அரைசதம் கடந்தார். அவர் 44 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 62 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த பட்லர் (28) 2 சிக்சர் 2 பவுண்டரி பறக்க விட்டார்.

கடைசி நேரத்தில் களமிறங்கிய பொல்லார்ட் வானவேடிக்கை காட்டினார். இதனால் மும்பை அணி 18 ஓவரிலே 4 விக்கெட் மட்டும் இழந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

பொல்லார்ட் 19 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி என 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருடன் ஹர்திக் பாண்ட்யா (2) களத்தில் இருந்தார். மும்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.