IPL:2016புனே அணியுடனான போட்டியில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


IPL:2016புனே அணியுடனான போட்டியில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டோனி, முதலில் பந்துவீசமுடிவெடுத்தார்.

இதன் படி பெங்களூர் அணியில் கோஹ்லியும், ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். ராகுல், 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கோஹ்லியும், டிவில்லியர்சும் இணைந்தனர்.

இவர்கள் இருவரும் புனே அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.குறிப்பாக டிவில்லியர்ஸ் அதிரடி காட்ட புனே பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கினர்.

இதனால் டிவில்லியர்ஸ் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதே போல் மறுமுனையில் அசத்திய விராட் கோஹ்லி 47 பந்துகளில் அரைசதம் எடுத்தார்.

இந்த ஜோடியை பிரிக்க டோனி மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.கடைசியாக 19வது ஓவரில் 80 ஓட்டங்கள் எடுத்திருந்த போது கோஹ்லி ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து அடுத்த பந்திலேயே 83 ஓட்டங்கள் எடுத்திருந்த டிவில்லியர்சும் ஆட்டமிழந்தார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்கள் எடுத்தது.

புனே அணியின் தரப்பில் பெரேரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் பின்னர் 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் புனே அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ரஹானே, டுபிளசி களமிறங்கினர். டுபிளசி 2 ஓட்டங்களில்ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து வந்த பீட்டர்சன் முதல் பந்திலே காயமடைந்து ’ரிட்டையர் ஹர்ட்’டாக வெளியேறினார்.

ஸ்டீவ் சுமித்தை கோஹ்லி 4 ஓட்டங்களில் ஓட்ட முறையில் வெளியேற்றினார். இதனால் அந்த அணி நெருக்கடியில் சிக்கியது. இதன் பின்னர் ஜோடி சேர்ந்த டோனி, ரஹானே நிதானமாகஆடினர்.

ரஹானே அரைசதம் கடந்தார். அவர் 46 பந்தில் 60 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து டோனியும் 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த பாட்டியா, திசர பெரேரா அதிரடி காட்டினர். திசர பெரேரா 13 பந்தில் 34 ஓட்டங்களும், பாட்டியா 21 ஓட்டங்களும் எடுத்தனர். இதனால் அணி வெற்றிக்கு மிக அருகில் சென்றது.

இருப்பினும் அடுத்து வந்தவர்களால் சொபிக்க முடியவில்லை. புனே அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 172 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.