லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?


லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் தம்மை சிங்கங்கள் என்று கூறிய தலைவர்கள், இன்று வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத் தரப்பினர் டொலர்களை தேடி வெளிநாடுகளுக்கு சென்று வருவது தொடர்பில் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்

சிங்கள ராவயவின் கூட்டம் ஒன்று காலியில் இடம்பெற்றபோது உரையாற்றிய அவர், இலங்கையில் இன்று சிங்கள பௌத்தர்களுக்காக பேசுவதற்காக எவரும் இல்லை என்று குறிப்பிட்டார்

எனவே அதனை நிவர்த்திக்கும் வகையிலேயே சிங்கள ராவய அரசியலுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு இன்று பல்வேறு கூறுகளாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் தாம் உட்பட்ட இலங்கை மக்களும் இரசிய உடன்பாட்டின் கீழ் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இன்று தேசிய பாதுகாப்பும் இல்லை. சமையலறை பாதுகாப்பும் இல்லை. சமையலறையில் எரிவாயு வெடிப்புக்கள் இடம்பெறுவது தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

அனுமதியின்றி லிற்றோ எரிவாயு கொள்கலன் கலவையை மாற்றியமைக்காக லிட்ரோ கேஸ் நிறுவன தலைவரை கைதுசெய்யவில்லை.

அவரை கைதுசெய்தால் கூட்டுச்சதி வெளியாகி விடும் என்ற காரணத்தினாலேயே அவர் கைதுசெய்யப்படவில்லை என்று தயாரட்ன தேரர் தெரிவித்தார்.

லிட்ரோ கேஸ் நிறுவன தலைவருக்கு (Litro Gas Chairman) மாத சம்பளமாக 20 லட்சம் ரூபா வழங்கப்படுகிறது. இது பலருக்கு ஒரு வருடத்தின் மொத்த சம்பளமாகக் கூட இருக்காது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் லிட்ரோ தலைவருக்கு (Litro Gas Chairman) வழங்கப்படும் இந்த சம்பளம், சமையலறைகளில் வெடிப்புக்களை ஏற்படுத்துவதற்காகவா வழங்கப்படுகிறது என்று தயாரட்ன கேள்வி எழுப்பினார்.

இதேவேளை நிகழ்வில் உரையாற்றிய சிங்கள ராவயவின் செயலாளர், எதிர்வரும் மார்ச் அளவில், அரிசி கிலோ ஒன்றின் விலை 500 ரூபாவாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக தெரிவித்தார்.

எனவே நாட்டை கடனில் இருந்து மீட்டு, இலங்கையின் சிங்கக்குட்டிகள் தமது அரசியலை முன்னெடுத்துச் செல்ல சிங்கள ராவய அமைப்பு களத்தை அமைத்து தரும் என்றும் அவர் தெரிவித்தார்