எம்.சி.சி உடன்படிக்கையை (mcc agreement) இனிமேல் இலங்கையில் முன்னெடுக்கப்போவதில்லை. அதனை வேறு ஒரு நாட்டிற்கு வழங்கியுள்ளோம்.
துரதிஷ்டவசமாக இலங்கை நல்லதொரு வாய்ப்பை இழந்துள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
எம்.சி.சி உடன்படிக்கை (mcc agreement) மூலமாக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக இதன்மூலம் இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. இது கிடைத்திருந்தால் இன்று நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும்.
ஆனால் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை குழப்பியதன் மூலமாக இன்று நல்ல வாய்ப்புகளை இலங்கை இழந்துள்ளது என்றே கூற வேண்டியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையில் வேறு புதிய உடன்படிக்கைகள் எதுவும் இப்போது வரையில் செய்துகொள்ளப்படவில்லை.
எனினும் எதிர்காலத்தில் புதிய உடன்படிக்கைகள் செய்துகொள்ள முடியும். அமெரிக்க நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய ஆர்வமாக உள்ளனர்.
அதற்கு முன்னர் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு அமையும் பட்சத்தில் எமது அரசாங்கத்தின் உதவி மட்டுமல்ல பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும் என்றார்.